குறிஞ்சிப் பாட்டு - கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261
அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும்.
ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் தீது என்றான். இது கற்புநெறியில் முடியும்; மிகவும் நல்லது; என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த எழுதப்பட்டது.
இந்தப் பாடலின் முடிவில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை கபிலரால் இயற்றப்பட்டவை அன்று.
பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் எழுதிச் சேர்த்த பாட்டுகள். முதல் பாடல் இப்பாட்டில் வரும் தலைவன், தலைவி, தோழி, தாயர் ஆகிய யார்மீதும் குற்றம் இல்லை என்று கூறுகிறது. இரண்டாம் பாடல் வடமொழியாளரின் காந்தருவ மணத்துக்கு நிகரானது என்று கூறுகிறது.
பட்டினப்பாலை - பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.
பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது.
இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர்.
கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன்.
இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.
இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான்.
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583
அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார்.
இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.
நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
பத்துப்பாட்டு - முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை
முல்லைப் பாட்டு - 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
மதுரைக் காஞ்சி - தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.
நெடுநல்வாடை - பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.
சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெரும்பாணாற்றுப்படை - 500 அடிகளைக் கொண்டு அமைந்தது. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.
முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.
"ஆற்றுப்படுத்தல்"
என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும்.
"முருகாற்றுப்படை"
எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.
இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்று வழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
No comments:
Post a Comment