Tuesday, 24 November 2015

தன்மைப் பன்மை வினைமுற்று

தன்மைப் பன்மை வினைமுற்று

உண்டோம் நாங்கள்
நடக்கிறோம் நாங்கள்
உண்டோம், நடக்கிறோம் எனும் வினைமுற்றுகள் ஒருமை அல்ல, பன்மை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பன்மையில் இவை உயர்திணையா அஃறிணையா? இவை இருதிணைக்கும் பொதுவானவை.
உண்டோம், நடக்கிறோம் என உயர்திணைப் பொருள்களும் பேசலாம்; ஆடுமாடுகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவதாகவும் இலக்கியம், கதை படைக்கலாம். தன்மை ஒருமை வினைமுற்று ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை ஆகிய மூன்றுக்கும் பொதுவாக இருப்பதை முன்பு கண்டோம். அதுபோலவே தன்மைப் பன்மையும் உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக வரும். அதாவது பலர்பால் பன்மைக்கும் (உயர்திணைப் பொருள்கள்) பலவின்பால் பன்மைக்கும் (அஃறிணைப் பொருள்கள்) தன்மைப் பன்மை வினைமுற்று பொதுவாக வரும்.
தன்மை ஒருமை வினைமுற்றைப் போலத் தன்மைப் பன்மை வினைமுற்றும் செயல், காலம், செயல் செய்தவர் என்ற மூன்றைக் குறிக்கும்
(1)வினைப் பகுதி-செயலை உணர்த்தும்
(2)காலங்காட்டும் இடைநிலை-காலம் உணர்த்தும்
(3)விகுதி-செயல் செய்தவர் அல்லது செய்தவைகளைக் குறிக்கும்.
(எ.கா)
உண்டோம் உண்+ட்+ஓம்
உண் - வினைப்பகுதி
ட் - இறந்தகாலம் காட்டும் இடைநிலை
ஓம் - விகுதி

2.3.1 தெரிநிலை வினைமுற்று
தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று, காலத்தை வெளிப்படையாகக் காட்டும்.
(எ.கா)
பிறந்தோம்-இறந்த காலம்-த்இடைநிலை
வாழ்கிறோம்-நிகழ் காலம்-கிறுஇடைநிலை
படிப்போம்-எதிர் காலம்-ப்இடைநிலை
இவ்வாறு இடைநிலைகள் அமைந்த தன்மைப்பன்மை வினைமுற்றுகளே தெரிநிலை வினைமுற்றுகள் ஆகும்.
இவ்வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மையை உணர்த்துவன விகுதிகளாகும். இன்றைய தமிழில் ‘ஓம்’ என்னும் விகுதியே தன்மைப் பன்மையைக் குறிக்க மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் பழங்காலத்தில், இந்த ‘ஓம்’ விகுதி குறிக்கும் பொருளில் அம், ஆம், எம், ஏம் ஆகிய விகுதிகளும் பயன்பட்டுள்ளன. (உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம்) இவை எல்லாச் சொற்களுக்கும் ‘உண்டோம்’ என்பதுதான் பொருள்.
தன்மைப் பன்மையில் தெரிநிலை வினைமுற்றுகள் இவ்வாறு வரும் எனப் பார்த்தோம். அடுத்து, குறிப்பு வினைமுற்றுகள் பற்றிக் காண்போம்.

2.3.2 குறிப்பு வினைமுற்று
தன்மை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுப் பற்றி முன்பு கண்டவற்றை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பன்மை வினைமுற்றுக்கும் அவ்விலக்கணம் பொருந்தும். பேசுபவரின் குறிப்பு அல்லது தொடரில் உள்ள குறிப்புக் கொண்டு குறிப்பு வினை முற்றின் காலம் இன்னது என உணரலாம்.
நல்லோம் யாம்’ என்பது சூழ்நிலையை ஒட்டி நாம் நேற்று நல்லோம், நாம் இன்று நல்லோம், நாம் நாளை நல்லோம் எனப்பொருள் தரும். இவ்வாறு வருவது தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.
தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மைக்குக் கூறப்பெற்ற ஐந்து விகுதிகளும் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் வரும்.
நல்லோம்யாம்-ஓம்விகுதி
நல்லம்யாம்-அம்விகுதி
நல்லாம்யாம்-ஆம்விகுதி
நல்லெம்யாம்-எம்விகுதி
நல்லேம்யாம்-ஏம்விகுதி
இன்றைய வழக்கில் இருப்பது ‘ஓம்’ விகுதி மட்டுமே.

No comments:

Post a Comment